| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு

by aadhavan on | 2025-12-12 08:30 PM

Share:


எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு

» மு. ஆதவன்

வேதங்களே வாழ்க்கைக்கு ஆதாரம். அதைப் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும் என ஆன்மிக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே. ஸ்ரீகிருஷ்ணன் பேசினார்.


சத்குரு சங்கீத சமாஜம் மற்றும் மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில், மதுரையில் சிறப்பு உபன்யாசம் நடந்து வருகிறது. நிகழ்வில் ஆன்மிக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே. ஸ்ரீகிருஷ்ணன் பேசியதாவது;

பாரத பூமியில், தமிழ்நாடு சிறப்பு வாய்ந்தது. அதில், மதுரைக்கு கூடுதல் பெருமை. மதுரம் என்றால் இனிமை. தென் என்றால் அழகு, உயர்வு என்று பொருள். 'பல்லாண்டு' தோன்றிய பெருமை, அழகு மதுரைக்கு உண்டு. இங்கு வாழ்வது புண்ணியம்.

பிறப்பு, இறப்புக்கான காரணம் தெரியாமல் வாழ்கிறோம். பாவம், புண்ணியம் எப்படி இருக்கும் எனவும் தெரியாது. அதை உடல் உறுப்புக்களால் தொட்டோ, முகர்ந்தோ உணர முடியாது. பிறப்புக்கு காரணம் உண்டு. கண்ணன், கீதையில் பல பிறவிகள் எடுத்ததாகச் சொல்கிறார். நமக்கு பிறவிகள் பல உண்டு. ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே அடுத்த பிறவிகள் எடுக்கிறோம். 

பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை என்பதற்காக, பூமி சுற்றவில்லை என சொல்ல முடியாது. அதைப் போலத்தான் பிறவியும். இதற்கான பதிலை, வேதம் சொல்கிறது. தர்மத்திற்கு மூலமான வேதத்திற்கு கால நிர்பந்தமும், அழிவும் இல்லை. 

வேதங்களே வாழ்க்கைக்கு ஆதாரம். எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. வேத சப்தங்கள் தான் சாஸ்திரம். இதை செய், இதை செய்யாதே என நமக்கு கற்பிக்கிறது. ஆயுர்வேதம், தனுர் வேதம், அர்த்த சாஸ்திரம் என வாழ்க்கைப் பாடங்களையும் சொல்லித் தந்திருக்கிறது. வேதம் தெரிந்தால், அறியாததை அறிந்து வாழ்வில் தெளிவு பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் வழக்கில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணனுக்கு, 'சனாதன காவலர்' விருது வழங்கப்பட்டது.

தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் இன்றும், நாளையும் மாலை 6:30 மணிக்கு தமிழ் வேதம், உபய வேதாந்தம் என்ற தலைப்பிலும் உபன்யாசம் நடக்க உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு பிராமண சமாஜ மதுரை மாவட்ட தலைவர் எஸ்.ரவி, செயலாளர் வி.ஸ்ரீராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment