by aadhavan on | 2025-12-02 12:56 PM
மதுரையில் நடைபெறும் சர்வதேச ஜூனியர் ஹாக்கி போட்டியில் பங்கேற்க வந்துள்ள வீரர்கள், மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று தரிசிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான 14-வது சீசன் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, 2ஆம் இடத்தில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. பி பிரிவில் இந்திய அணி ஓமன், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
தொன்மையான கலாச்சாரங்கள், ஆன்மிக பண்பாடு என தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் உள்ள கோயில்கள் மற்றும் கலாச்சார இடங்களை சுற்றிப் பார்ப்பதில் வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று காலையில் ஸ்விட்சர்லாந்து அணி வீரர்கள் அதன் கேப்டன் ஜென்ஸ் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசிக்க வந்தனர். வீரர்களை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ஆன்மிக எழுத்தாளர் மு.ஆதவன் வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர். கேப்டன் ஜென்ஸ் உடன் பேசிய நெல்லை பாலு மதுரையின் சிறப்புகளையும் ஆன்மிக கலாச்சார மையமாக மதுரை திகழ்வதையும் விளக்கிச் சொன்னார்.
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் முதன் முறையாக இந்தியாவில் மதுரை மற்றும் சென்னை என இரு நகரங்களில் நடப்பது குறிப்பிடத்தக்கது.