by Vignesh Perumal on | 2025-08-03 11:22 AM
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (55) என்பவர், நேற்று நத்தம் ரோடு பொன்னகரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக செல்வம் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்வம் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி செல்வம் இன்று உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜெகதீஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்