by Vignesh Perumal on | 2025-08-03 10:46 AM
தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணமாக நெல்லை வந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தனது வீட்டில் சிறப்பு விருந்து அளிக்கிறார்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக நெல்லைக்கு வருகை தந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளிக்க நயினார் நாகேந்திரன் முடிவு செய்தார்.
நெல்லை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள நயினார் நாகேந்திரனின் வீட்டில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விருந்தில், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த விருந்து, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்