by Vignesh Perumal on | 2025-08-03 10:35 AM
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, காவிரி ஆற்றின் கரையோரங்களில் பொதுமக்கள் மற்றும் புதுமணத் தம்பதியர் மங்களப் பொருட்களை வைத்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஆடி மாதம் 18-ஆம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா, காவிரி ஆற்றின் புதுவெள்ளத்தைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஆற்றங்கரைக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டால், விவசாயம் செழிக்கும் என்றும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
இன்று காலை முதலே, திருச்சி முக்கொம்பு, அய்யம்பாளையம், கல்லணை உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் புதுமணத் தம்பதியினர் பெருந்திரளாகக் கூடினர். அவர்கள் மஞ்சள்கயிறு, குங்குமம், வளையல், கண்ணாடி, வெற்றிலை-பாக்கு, பூ, பழங்கள், அரிசி, வெல்லம் போன்ற மங்களப் பொருட்களை ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து, காவிரி நதிக்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர்.
புதுமணத் தம்பதியினர், புதிதாக திருமணமான பெண்கள், மற்றும் இளம் பெண்கள் ஆகியோர் காவிரித் தாயை வணங்கி, மங்களப் பொருட்களை ஆற்றில் விட்டு, தங்கள் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்துகொண்டனர். இந்த நிகழ்வு அப்பகுதிகளில் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழா, காவிரி ஆற்றை நம்பி வாழும் மக்களின் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்