by Vignesh Perumal on | 2025-08-02 03:04 PM
பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றபோது, தான் முறையாக படிவங்களை நிரப்பி அளித்ததாகவும், வாக்குச் சாவடி நிலை அலுவலர் (BLO) அதனைப் பெற்றுச் சென்றதாகவும் தெரிவித்தார். ஆனாலும், தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று கூறினார்.
"வாக்காளர் பட்டியலில் எனது பெயரே இல்லை என்றால், நான் எப்படி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். இது ஜனநாயகத்தின் படுகொலை என்றும், வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சுமார் 20,000 முதல் 30,000 பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும், மொத்தமாக சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளித்த இந்தியத் தேர்தல் ஆணையம், அவரது குற்றச்சாட்டு "தவறானது" என்று மறுப்பு தெரிவித்துள்ளது. தேஜஸ்வி யாதவின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 416-ல் இடம்பெற்றுள்ளது என்பதற்கான ஆதாரத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பழைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கொண்டு தேஜஸ்வி யாதவ் தேடியதால், அவரது பெயர் பட்டியலில் இடம்பெறாதது போன்ற ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.