by Vignesh Perumal on | 2025-08-02 02:48 PM
நெல்லை இளைஞர் கவின் ஆணவக்கொலையைக் கண்டித்து, தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் இன்று (ஆகஸ்ட் 2, 2025) தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞரணிச் செயலாளர் நத்தம் ஷேக் பரீத் உட்படப் பல தமிழ் தேசிய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம், கவிமண்டலத்தைச் சேர்ந்த கவின் என்ற இளைஞர், சாதி மறுப்புத் திருமணம் செய்த காரணத்தால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரமான படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நத்தம் ஷேக் பரீத், "கவின் படுகொலையானது, சமூகத்தில் சாதியப் பாகுபாடு இன்னும் வேரூன்றி இருப்பதைக் காட்டுகிறது. ஆணவக்கொலைகள் தொடர்வது தமிழக அரசுக்கு அவமானம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் ஆட்சி கழகத் தலைவர் எஸ். ஆர். பாண்டியன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.