| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி - எம்.எல்.ஏ இடையே வாக்குவாதம்...!

by Vignesh Perumal on | 2025-08-02 02:30 PM

Share:


அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி - எம்.எல்.ஏ இடையே வாக்குவாதம்...!

"நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் தொடக்க விழாவில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கடந்த ஏப்ரல் 21, 2025 அன்று சட்டமன்றத்தில் ₹12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற மருத்துவ முகாம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம் ஸ்டால்களை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இதே திட்டத்தின் கீழ், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தக்கம்பட்டியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பேனரில் தனது புகைப்படம் இல்லாததைக் கண்டு கோபமடைந்தார். மேடைக்கு வந்த அவர், மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம், "புரோட்டோகால் படி நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் ஏன் இடம்பெறவில்லை?" என்று கோபமாக வினவினார்.

இதனைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, நலத்திட்ட உதவி அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் கையில் கொடுக்காமல், அதனை தானே கொடுப்பேன் என சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பிடுங்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மேடையிலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.


மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நிகழ்ச்சி பாதியிலேயே முடிக்கப்பட்டு, எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் இரண்டு முக்கியப் பிரமுகர்களுக்கு இடையே நடந்த இந்தச் சம்பவம், கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment