| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

யுனெஸ்கோ அங்கீகாரம்...! அறநிலையத்துறை ஆய்வு...!

by Vignesh Perumal on | 2025-08-02 11:26 AM

Share:


யுனெஸ்கோ அங்கீகாரம்...! அறநிலையத்துறை ஆய்வு...!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் உள்ள தனித்துவமான சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலைக்கு உலக பாரம்பரிய அங்கீகாரம் (யுனெஸ்கோ) பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.

தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் உள்ள சிற்பங்கள் வேறு எந்த கோவிலிலும் காண இயலாத ஒப்பற்ற கலைநயத்துடன் விளங்குகின்றன. இந்த சிற்பங்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. இந்த தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கலைநயத்தை உலகறியச் செய்யும் வகையில், யுனெஸ்கோ இதனை உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க வேண்டும் என அறங்காவலர் குழு மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கையைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கோவிலின் பழமை, கலைநயம், மற்றும் தனித்தன்மை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி மற்றும் பிற அறங்காவலர்கள் உடனிருந்தனர்.


இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி கூறுகையில், "கோவிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தால், இது உலக அளவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறும். இதன் மூலம் இப்பகுதிக்கு பெருமை சேர்வதோடு, சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும்," என்று தெரிவித்தார்.

அறநிலையத்துறையின் இந்த ஆய்வு, தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலுக்கு உலக அங்கீகாரம் கிடைப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது.




செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment