by Vignesh Perumal on | 2025-08-02 11:18 AM
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில், முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உத்திரமேரூர் தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார்.
திமுகவின் ‘உடன்பிறப்பே வா' என்ற கள ஆய்வு நிகழ்வு, கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. இதன்மூலம், ஒவ்வொரு தொகுதிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக நிர்வாகிகளைச் சந்தித்து, தொகுதி நிலவரம், அரசின் திட்டங்கள், மற்றும் கட்சி பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 39 தொகுதிகளுக்கு இந்த ஆலோசனை நிறைவடைந்தது. அதன் பிறகு, கடந்த 12 நாட்களாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய இந்த கள ஆய்வு நிகழ்ச்சியில், இன்று (ஆகஸ்ட் 2, 2025) உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள், மக்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்த விதம், மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் நேரடியாகக் கேட்டறிந்தார்.
இந்த கள ஆய்வின் மூலம், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்களை நேரடியாகத் தெரிந்துகொண்டு, அடுத்தகட்ட தேர்தல் உத்திகளை வகுக்கவும், அரசின் திட்டங்களை இன்னும் சிறப்பாக மக்களைச் சென்றடையச் செய்யவும் இந்த நிகழ்வு உதவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்