by Vignesh Perumal on | 2025-08-01 07:57 PM
கன்னிவாடி அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், வாலிபருக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹10,000 அபராதமும் விதித்து திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (26) என்பவர் 2023-ஆம் ஆண்டில் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கன்னிவாடி போலீசார் பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கன்னிவாடி காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் தீவிர முயற்சியால், வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்றது.
இன்று, வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷுக்கு 26 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ₹10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்