by Vignesh Perumal on | 2025-08-01 07:28 PM
2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ் சினிமாவுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். இது அவருக்கு இரண்டாவது தேசிய விருதாகும். முன்னதாக, 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக அவர் இந்த விருதைப் பெற்றிருந்தார்.
சிறந்த ஒடியா திரைப்படம் ’புஷ்கரா’, சிறந்த மராத்தி திரைப்படம் ’ஷியாம்ச்சி ஆய்’, சிறந்த மலையாள திரைப்படம் ’உள்ளொழுக்கு’, சிறந்த கன்னட திரைப்படம் ’கண்டீலு’, சிறந்த ஹிந்தி திரைப்படம் ’கட்ஹல் எ ஜாக்ப்ரூட் மிஸ்டரி’, மேலும், தமிழ் சினிமாவின் சார்பில், ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடித்த 'பார்க்கிங்' திரைப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த மூத்த நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், எழுத்தாளரும் இயக்குநருமான ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் கிடைத்துள்ளது.
இந்தியாவில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்