| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் BJP

யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை...! திடீர் முடிவு...! நயினார் நாகேந்திரன் விளக்கம்...!

by Vignesh Perumal on | 2025-08-01 05:22 PM

Share:


யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை...! திடீர் முடிவு...! நயினார் நாகேந்திரன் விளக்கம்...!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவரை சமாதானப்படுத்த பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். வருகிற 26ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை தொடங்கி தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணி உறுதியானதாக தெரிவித்தார். எனினும், தாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறிவந்தார்.

இந்த நிலையில், கடந்த 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரியிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் அதிருப்தியில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, "நம்மை மதிக்காத பாஜக கூட்டணியில் இனியும் இருக்கக்கூடாது" என்று நிர்வாகிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.

இதற்கிடையில், கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று இரண்டு முறை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். வருகிற 26ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக பாஜக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதியளித்ததாக கூறப்படுகிறது. எனினும், பாஜக நிர்வாகிகளின் வாக்குறுதியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து கூறியதாவது: "கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன், ஓ.பன்னீர்செல்வத்துடன் நான் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அவரிடம் வலியுறுத்தினேன். பலமுறை பேசிய நிலையிலும் அவர் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் வெளியேறியதற்கான காரணம் சொந்தப் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை."

"கூட்டணியிலிருந்து விலகியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். அவர் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்திருப்பேன். இப்போதும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால், 26ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்" என்று தெரிவித்தார்.

மேலும், "ஓ.பன்னீர்செல்வம் தனது தொகுதிப் பிரச்சனைக்காகவோ அல்லது சொந்தப் பிரச்சனைக்காகவோ முதலமைச்சரை சந்தித்திருக்கலாம். ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான்கூட முதலமைச்சரை சந்திக்கலாம்," என்றும் அவர் கூறினார்.








இணை ஆசிரியர் - சதீஷ்குமார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment