by Vignesh Perumal on | 2025-08-01 05:20 PM
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இணைய இருப்பதாகவும், மதிமுக வெளியேற இருப்பதாகவும் பரவிய வதந்திகளுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்தார். தங்கள் கட்சி தி.மு.க.வுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
நேற்று (ஜூலை 31) முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இணையப் போவதாகவும், இதன் காரணமாக மதிமுக அக்கூட்டணியில் இருந்து வெளியேறி அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரவின.
இந்த வதந்திகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “பிரேமலதா முதல்வரை சந்தித்ததும், தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க. வருகிறது, மதிமுக வெளியேறுகிறது, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வோடு மதிமுக கூட்டணிப் பேச்சை ஆரம்பித்துவிட்டது எனப் பல தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன். தி.மு.க.வுடன் மட்டுமே மதிமுக கூட்டணி வைக்கும்" என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
வைகோவின் இந்த விளக்கம், தி.மு.க. கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும் என்பதையும், அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமைந்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்