by Vignesh Perumal on | 2025-07-31 07:40 PM
திருப்பத்தூரில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு வீட்டில், கத்தி முனையில் தாய் மற்றும் மகளை மிரட்டி, 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் உள்ள மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகேயுள்ள வீட்டில் வசிப்பவர் நேற்று இரவு, அந்த வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் தனியாக இருந்துள்ளனர். அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர், தாய், மகள் இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களைக் கட்டிப்போட்டுள்ளார்.
பின்னர், பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகளையும், ₹5 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துள்ளார். கொள்ளைச் சம்பவத்தை முடித்த பிறகு, அந்த மர்ம நபர் ஹிஜாப் அணிந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே, எந்தவித அச்சமும் இன்றி கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.