by Vignesh Perumal on | 2025-08-01 11:42 AM
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், மூன்று பழங்குடியினப் பெண்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாகக் கேரளாவைச் சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பெண், பஜ்ரங் தளத்தின் வற்புறுத்தலால் பொய் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்திருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியினர் ஆதிக்கம் அதிகம் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில், கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளான பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் மற்றும் உள்ளூர் மத போதகரான சுக்மான் மண்டாவி ஆகியோர், மூன்று பழங்குடியினப் பெண்களை வலுக்கட்டாயமாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாகப் பஜ்ரங் தள நிர்வாகி ஒருவர் நாராயண்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மூன்று கன்னியாஸ்திரிகளையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், கிறிஸ்துவ அமைப்புகளும் இந்தக் கைதைக் கண்டித்து வந்தன.
இந்நிலையில், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்ட பெண்களில் ஒருவரான பிரதான் என்பவர், காவல்துறையினரிடம் புதிய வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில், "பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தியதால்தான், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது என்றும், கடத்தப்பட்டதாகவும் நான் பொய்யான வாக்குமூலத்தை அளித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதானின் இந்த வாக்குமூலம், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. பிரதானின் வாக்குமூலம் குறித்து நாராயண்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்