by Vignesh Perumal on | 2025-07-31 07:26 PM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) இன்று ஒரே நாளில் இருமுறை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பி.எஸ். அணி அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தச் சந்திப்புகள் நடந்தது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இன்று காலை சென்னை அடையாறில் உள்ள தியோசோபிகல் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஓ.பி.எஸ். அவரைச் சந்தித்திருந்தார். அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதல்வரிடம் அவர் நலம் விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், மாலையில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு, முதல்வருடன் அவர் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளுக்கு முன்பு, பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டு, அது கிடைக்காத நிலையில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து தனது அணி விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆளும் தி.மு.க.வின் தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பி.எஸ். இருமுறை சந்தித்துப் பேசியது, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
இதேபோல், இன்று காலை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். மாற்று அணியில் உள்ள முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து முதல்வரைச் சந்தித்து வருவதால், இது வரும் கால அரசியல் கூட்டணி மாற்றங்களுக்கான முன்னுரையாக இருக்குமோ என்ற பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
இணை ஆசிரியர்- சதீஷ்குமார்.