by Vignesh Perumal on | 2025-07-22 11:13 AM
குரூப்-4 விடைத்தாள்கள் கையாளுதல் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் மற்றும் மதுரை சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தனது கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர், சேலத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்துப் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர், "சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள் இல்லை" என்று தெளிவுபடுத்தினார். மேலும், "குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14-ஆம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்டுவிட்டன" என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். இதன் மூலம் சேலத்தில் விடைத்தாள் கையாளுதலில் முறைகேடு நடந்ததற்கான சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
சமீபத்தில் மதுரையில் குரூப்-4 கேள்வித்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை எழுப்பியது. இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்தார்.
முக்கியமாக, "டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார் கைகளுக்குச் செல்லாது" என்றும் அவர் விளக்கம் அளித்தார். இந்த மாற்றம், தேர்வுத்தாள்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதோடு, கசிவு அல்லது முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கை, தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் எனப் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.