by Vignesh Perumal on | 2025-07-06 09:13 AM
தூத்துக்குடியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு ஓடும்போதே திடீர் மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் பேருந்தைச் சாலையோரமாகப் பத்திரமாக நிறுத்தியதால், அதில் பயணித்த 38 பயணிகள் உயிர் தப்பினர். ஓட்டுநரின் இந்தச் சமயோசிதச் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த ஓட்டுநர் லிங்கப்பாண்டி (34) மற்றும் நடத்துநர் சிவகுமார் ஆகியோர் நேற்று (ஜூலை 5) பிற்பகலில் விருதுநகரில் இருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்தை இயக்கி வந்தனர். பேருந்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் திருச்செந்தூருக்கு 38 பயணிகளுடன் இன்று (ஜூலை 6) மாலை 4:20 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.
பேருந்து தூத்துக்குடி சத்யா நகர் நியோ டைடல் பார்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் லிங்கப்பாண்டிக்குத் திடீரென மயக்கம் வருவதுபோல் இருந்துள்ளது. உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட அவர், பேருந்தை மெதுவாகச் சாலையோரமாகப் பத்திரமாக நிறுத்திவிட்டு, ஸ்டீரிங்கில் மயங்கிச் சாய்ந்துள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட நடத்துநர் சிவகுமார், ஆம்புலன்ஸுக்கும், போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். பயணிகள் அனைவரும் உடனடியாக மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயக்கமடைந்த லிங்கப்பாண்டி உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
சரியான நேரத்தில் ஓட்டுநர் லிங்கப்பாண்டி பேருந்தை நிறுத்தி, பெரும் விபத்தைத் தவிர்த்து, 38 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியது அனைவராலும் பாராட்டப்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும் தனது கடமையை உணர்ந்து, பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்த ஓட்டுநர் லிங்கப்பாண்டியின் செயல் தூத்துக்குடியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.