by Vignesh Perumal on | 2025-07-05 01:09 PM
கெம்பகவுடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில், விமானி இருக்கையில் இருந்த பைலட் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் இன்று (ஜூலை 5) காலை கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்தது. ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லிக்குச் செல்ல தயாராக இருந்த நிலையில், விமானி இருக்கையில் இருந்த முதன்மை பைலட்டுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக ஊழியர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, மயங்கிய பைலட்டுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த எதிர்பாராத சம்பவத்தால், டெல்லிக்குச் செல்லவிருந்த விமானம் தாமதமானது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, மற்றொரு மாற்று பைலட் உடனடியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே, விமானம் பாதுகாப்பாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் மேலதிக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.