by Vignesh Perumal on | 2025-07-05 12:04 PM
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தும், அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் இன்று (ஜூலை 5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. காவல்துறையின் அத்துமீறல்களையும், காவல் மரணங்களையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் கூறியதாவது: "அஜித்குமார் மரண வழக்கில் தொடர்புடைய அனைத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, விரைந்து தண்டனை வழங்க வேண்டும். காவல் நிலையங்களில் நடைபெறும் இதுபோன்ற மனித உரிமை மீறல்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க, வெளிப்படையான விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர். அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.