by Vignesh Perumal on | 2025-07-05 11:04 AM
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், அழகுபட்டி மற்றும் பட்டத்துநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் இணைந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு "பொறுப்பற்ற அப்பா முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு...!" என்ற தலைப்பில் நூதனமான ஒரு கோரிக்கை மனுவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பொதுவாக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னைப் "உங்களில் ஒருவன்" என்றும், "அப்பா" என்றும் பாசத்துடன் விளித்துக்கொள்வது வழக்கம். இந்த உணர்வுபூர்வமான விளிப்பை வைத்தே பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அழகுபட்டி மற்றும் பட்டத்துநாயக்கன்பட்டி கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, குறிப்பாகக் கோடைக்காலத்தில் தகரக் கொட்டகைகளில் மாணவர்கள் சிரமப்படுவது போன்ற பிரச்சனைகளை இந்தக் கோரிக்கை மனு வெளிப்படுத்துகிறது.
பொதுமக்கள் சார்பாக வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், உணர்வுபூர்வமான வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது அதில் கூறப்பட்டுள்ளதாவது : "அப்பா என்ற உறவு மாறாது!. "உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் "உங்கள் பேரக்குழந்தைகளுக்கு மட்டும் AC பள்ளியில் இடம்...!" "எங்கள் குழந்தைகளுக்கு தகர கொட்டகையில் இடமா அப்பா...!" "என்ன(அ)ப்பா ...! உங்க சமூக நீதி...!"
இந்தக் கோரிக்கை, ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் நிலவும் மோசமான அடிப்படை வசதிகளை சுட்டிக்காட்டுகிறது. மறுபுறம், ஆட்சியாளர்கள் தங்கள் குடும்ப நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஏழை எளிய மக்களின் பிள்ளைகளின் கல்வி உரிமையை புறக்கணிப்பதாக ஒரு மறைமுகக் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது. "சமூக நீதி" என்ற திராவிடக் கொள்கையைச் சுட்டிக்காட்டி, அதில் உள்ள முரண்பாடுகளை கேள்வி கேட்கும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இந்த நூதனக் கோரிக்கை மனு, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது திண்டுக்கல் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளி உள்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. ஆளும் அரசு, தனது கொள்கை முழக்கங்களுக்கும், கள எதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியை சரிசெய்ய வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை இந்தக் கோரிக்கை பிரதிபலிக்கிறது.
ஆசிரியர்கள் குழு....