by Vignesh Perumal on | 2025-07-04 04:28 PM
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மூவரை அரிவாளால் வெட்டிய வழக்கில், சுதன் என்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காயமடைந்த மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எரியோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 4) காலை, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மதன் (23), கருப்புசாமி (20), அருண்குமார் (20) ஆகியோர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, எரியோடு அ.தி.மு.க. அலுவலகம் அருகில் மறைந்திருந்த ஒரு கும்பல், இம் மூவரையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மதன், கருப்புசாமி, அருண்குமார் ஆகியோர் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துணிகரமான அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பிரதீப் உத்தரவின் பேரில், வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) பவித்ரா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாகவே இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.