by Vignesh Perumal on | 2025-07-04 03:50 PM
திண்டுக்கல் மாவட்டம், மணியக்காரன்பட்டியை அடுத்த பூஞ்சோலை அருகே நேற்று (ஜூலை 3) இரவு பாஜக முன்னாள் மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் (எ) ரெண்டக் பாலன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சதீஷ் மற்றும் கஜேந்திரன் என்ற இருவர் இன்று (ஜூலை 4) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் JM-3 நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி முன்பு சரணடைந்துள்ளனர்.
நேற்று இரவு, மணியக்காரன்பட்டி பூஞ்சோலை பகுதியில் பாலகிருஷ்ணன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்துத் தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதாகத் தெரியவந்தது.
கொல்லப்பட்ட பாலகிருஷ்ணன், அண்ணன் - தம்பி இடையிலான ஒரு சொத்துத் தகராறில் ஒரு தரப்புக்குச் சாதகமாகச் செயல்பட்டதால், மற்றொரு தரப்பினர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சிபிசாய் சௌந்தர்யன் தலைமையிலான போலீசார், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலை நடந்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே, இந்த வழக்கில் தொடர்புடைய சதீஷ் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் இன்று திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் JM-3 நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி முன்பு சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பாஜக நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைந்து சரணடைந்தது, காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.