by Vignesh Perumal on | 2025-07-04 03:40 PM
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு, தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) மற்றும் இந்த வழக்கின் எதிர்மனுதாரரான வெங்கடாசலபதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையிலும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிக்கும் வகையிலும் தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டார்.
இதையடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தன.
அமலுக்கு வந்த இந்தச் சட்டங்களை எதிர்த்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் கே.வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக அரசின் இந்த சட்ட மசோதாக்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிகளுக்கு முரணாக உள்ளதாகவும், துணைவேந்தர்கள் நியமனத்துக்கான தேடுதல் குழு அமைப்பது மற்றும் நியமனம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு, தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்றும், மாநில அரசின் அதிகாரங்களில் உயர்நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் கோரியுள்ளது.
நீதிபதிகள் பி.வி. நரசிம்மா, ஆர். மகாதேவன் அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தது. தமிழக அரசின் மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி மற்றும் எதிர்மனுதாரரான வெங்கடாசலபதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அதிகாரப் போர் உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.