by Vignesh Perumal on | 2025-07-03 05:40 PM
தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மன்றச் செயல்பாடுகள் இன்று (ஜூலை 3, 2025) கோலாகலமாகத் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம், பாடப்புத்தக அறிவையும் தாண்டி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர இந்த மன்றங்கள் அடிப்படை கருவியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 207 பள்ளிகளில் இந்த மன்றச் செயல்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. இதில் 99 நடுநிலைப்பள்ளிகள், 36 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 72 மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும்.
மாணவர்களின் பல்வகைத் திறமைகளை வளர்க்கும் நோக்கில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கீழ்க்கண்ட ஆறு மன்றங்களுக்கு இன்று துவக்க விழா நடைபெற்றது.
அதாவது, கலைத் திருவிழா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம், விநாடி வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் ஆகிய மன்றங்கள் ஆகும்.
தேனி மாவட்டம் பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துவக்க விழா கூட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் மோகன் அவர்கள் கலந்துகொண்டு, மன்றப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாணவர் மன்றத் தூதுவர்களை முறையாக அறிமுகம் செய்து மன்றச் செயல்பாடுகளைத் துவக்கி வைத்தார்.
மன்றங்களின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கரியன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி. பிருந்தா அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார். பள்ளி ஆசிரியர் நன்றியுரையாற்ற, பள்ளித் தமிழாசிரியர் ஈஸ்வரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
இந்த மன்றச் செயல்பாடுகள் மாணவர்களுக்குப் பாட இணைச் செயல்பாடுகளில் பங்கேற்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும், சமூக அறிவை மேம்படுத்தவும் ஒரு தளத்தை அமைக்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.