by Vignesh Perumal on | 2025-07-03 01:13 PM
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படும் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா குறித்து தற்போது பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் மீது ஏற்கனவே மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அஜித்குமார் மரண வழக்கின் மையப்புள்ளியில் உள்ள நிகிதா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன.
நிகிதா, திண்டுக்கல் M.V.M. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக நிகிதா மீது புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.
நிகிதா மருத்துவம் படித்தவர் அல்ல என்றும், அவர் பி.எச்.டி. முடித்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு சம்பவத்தில், அரசு வேலை ஆசையில் சிலர் நிகிதாவிடம் ரூ.16 லட்சம் வரை கொடுத்ததாகவும், ஆனால் வேலை வாங்கித் தராத நிலையில் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சம்பந்தப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போது திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமி அம்மாள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா அளித்த புகாரின் அடிப்படையிலேயே காவலர்கள் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிகிதாவின் பின்னணி குறித்த இந்தத் தகவல்கள், அஜித்குமார் மரண வழக்கின் விசாரணையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும்.
நிகிதா மீதுள்ள இந்த முந்தைய குற்றச்சாட்டுகள், தற்போதைய அஜித் குமார் மரண வழக்கின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியில் உள்ள சிக்கல்களையும் மேலும் ஆழமாக்கியுள்ளன. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நிகிதா குறித்த இந்த தகவல்களும் விசாரணையில் சேர்க்கப்பட்டு, உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.