by Vignesh Perumal on | 2025-05-19 03:27 PM
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்சாயல் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஆட்டுப்பாக்கம் அரசு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் தேவி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வச்சாயல், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், தேவியை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி 31-ம் தேதி சோளிங்கர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் சுமூகமாக சென்ற வாழ்க்கை, பின்னர் தெய்வச்சாயலின் கோர முகத்தை வெளிக்காட்டியுள்ளது. தேவியை முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க தெய்வச்சாயல் முயற்சித்ததாக தேவி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, தெய்வச்சாயல் தினந்தோறும் தேவியை தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். நாளுக்கு நாள் தொல்லைகள் அதிகரித்ததால், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி தேவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, "இது எங்கள் எல்லை இல்லை" என்று கூறி தேவியை திருப்பி அனுப்பியுள்ளனர். அரக்கோணத்தில் உள்ள எந்த காவல் நிலையத்திலும் தெய்வச்சாயலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கடைசியாக, அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியை சந்தித்து தனக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று தேவி கோரிக்கை வைத்துள்ளார். திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுவதால், தனக்கு ஆதரவாக இருக்கும்படி எம்.எல்.ஏ. ரவியை தேவி வேண்டிக் கொண்டார். தேவிக்கு நீதி கிடைக்கும் வரை ஆதரவாக இருப்பதாக எம்.எல்.ஏ. ரவி உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தெய்வச்சாயல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!