by Vignesh Perumal on | 2025-05-13 12:14 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலி புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கதலி நரசிங்க பெருமாள் கோவில் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் இன்று நிறைவு பெற்றது. தேர் வெற்றிகரமாக நிலையை வந்தடைந்ததால் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கோவிந்தா கோஷம் எழுப்பினர்.
கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாகத் தொடங்கிய இத்திருவிழாவில், தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதலி நரசிங்க பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு மண்டகப்படி பூஜைகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாள் தேர் வடக்குத் தெருவில் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று காலை பக்தர்கள் திரளாக வந்து கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மெல்ல நகர்ந்து கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த நிலையை அடைந்ததும் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
தேர் நிலையை அடைந்ததும், பக்தர்கள் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்புப் பதார்த்தங்களை பொதுமக்களின் மீது வீசி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு மகாதீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை, சுவாமிகள் பூப்பல்லக்கில் பவனி வந்து சப்தாவர்ணம் சாத்தப்படும் நிகழ்வுடன் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
கோவில் செயல் அலுவலர் சுந்தரி தலைமையிலான விழாக்குழுவினர் திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். திரளான பக்தர்கள் இந்த தேரோட்ட விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!