| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

கவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..! தமிழக அரசு அறிவிப்பு..! இந்த படிப்பு பற்றி தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-05-12 10:42 AM

Share:


கவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..! தமிழக அரசு அறிவிப்பு..! இந்த படிப்பு பற்றி தெரியுமா...?

தமிழகத்தில் உள்ள கவின் கலை கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கலை மற்றும் பண்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

தமிழகத்தில் சென்னை, கும்பகோணம் மற்றும் மதுரை ஆகிய மூன்று இடங்களில் அரசு கவின் கலை கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் காட்சித்தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design), வண்ணக் கலை (Painting), சிற்பக் கலை (Sculpture), சுடுமண் வடிவமைப்பு (Ceramics), துகிலியல் வடிவமைப்பு (Textile Design) மற்றும் பதிப்போலியம் (Printmaking) ஆகிய பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சென்னையில் உள்ள கவின் கலை கல்லூரியில் காட்சித்தொடர்பு வடிவமைப்பு, வண்ணக் கலை, சிற்பக் கலை, சுடுமண் வடிவமைப்பு மற்றும் துகிலியல் வடிவமைப்பு ஆகிய ஐந்து பிரிவுகளிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளன. கும்பகோணம் மற்றும் மதுரை கல்லூரிகளில் காட்சித்தொடர்பு வடிவமைப்பு, வண்ணக் கலை மற்றும் சிற்பக் கலை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டுமே இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. பதிப்போலியம் இளங்கலை படிப்பு சென்னையில் மட்டுமே உள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

இளங்கவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கவின் கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.artandculture.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30 ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்: ரூ. 50 . இதர பிரிவினர்: ரூ. 100

விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை, உரிய கல்விச் சான்றிதழ்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும். சென்னை, மதுரை மற்றும் கும்பகோணம் ஆகிய கல்லூரிகளுக்கான விண்ணப்பக் கட்டணத்தை அந்தந்த கல்லூரிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே, கவின் கலை படிப்புகளில் சேர விரும்பும் தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment