| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

வைகை ஆற்றில் மக்கள் வெள்ளம்..!

by Vignesh Perumal on | 2025-05-12 10:08 AM

Share:


வைகை ஆற்றில் மக்கள் வெள்ளம்..!

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (12.05.2025) சித்ரா பௌர்ணமி அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்ட சுந்தரராஜப்பெருமாள் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு திருமஞ்சனம் கண்டருளிய பின், தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் அதிகாலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையை அணிந்து தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய அந்த கண்கொள்ளாக் காட்சியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலிருந்தே மதுரையில் குவிந்திருந்தனர்.

வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே வைகை ஆற்றுக்கு வந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் காலை 7.25 மணி வரை வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 15 லட்சம் பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா" என்று உரக்க கோஷமிட்டனர். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளியதை முன்னிட்டு, ஆற்றில் தண்ணீர் நிரப்பப்பட்டு, பக்தர்கள் புனித நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்கக்குதிரையில் எழுந்தருளியது மேலும் சிறப்பம்சமாகும். பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

மதுரை சித்திரைத் திருவிழா மே 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இந்த வைபவம் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்துவிட்டு, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த வைபவம் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment