| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

ஆக்கிரமிப்பு அகற்றும் நோட்டீஸுக்கு எதிர்ப்பு...! போராட்டம்..!

by Vignesh Perumal on | 2025-05-09 07:40 PM

Share:


ஆக்கிரமிப்பு அகற்றும் நோட்டீஸுக்கு எதிர்ப்பு...! போராட்டம்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டி சாலையில் அமைந்துள்ள கதிர் நரசிங்கபுரம் கிராமத்தில் இன்று (09.05.2025) பரபரப்பான சூழல் நிலவியது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஒரு நாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிர் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சர்வே மேற்கொண்டனர். அந்த சர்வேயின் அடிப்படையில், ஆக்கிரமிப்புகள் வரும் 15-ஆம் தேதி அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோட்டீஸுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், இன்று தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனீர் கடைகள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், "நாங்கள் 20 முதல் 30 ஆண்டுகளாக இந்த இடத்தில் வசித்து வருகிறோம். முறையாக சர்வே கூட செய்யாமல், நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி எங்களை வெளியேற்ற நினைக்கிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும்" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

தங்களது வாழ்வாதாரமான இடத்தை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி, கிராம மக்கள் தேனி நாடாளுமன்ற உறுப்பினரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கிராம மக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment