| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

நூலகத்தின் சாதனை மாணவர்..! தொடர் முயற்சியால் அரசுப் பணி...!

by Vignesh Perumal on | 2025-05-09 03:48 PM

Share:


நூலகத்தின் சாதனை மாணவர்..! தொடர் முயற்சியால் அரசுப் பணி...!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தென்கரை முழு நேர கிளை நூலகம் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகிறது என்பதற்கு மற்றுமொரு சான்றாக, இங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் படித்து வந்த போட்டித் தேர்வு மாணவர் சிவானந்தம், சமீபத்தில் நடைபெற்ற குருப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) இளநிலை உதவியாளர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவானந்தம் தனது இந்த வெற்றிக்கு தென்கரை நூலகத்தின் அமைதியான சூழலும், அங்குள்ள நல்ல நூல்களும், வழிகாட்டுதல்களும் முக்கிய காரணம் என்கிறார். இன்று (09.05.2025), தனது வெற்றிக்கு காரணமான நூலகத்திற்கு வருகை தந்த சிவானந்தம், நூலக ஆர்வலர் அன்புக்கரசன், வழக்கறிஞர் மணி கார்த்திக், பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் நல்நூலகர்கள் விசுவாசம், சவடமுத்து ஆகியோரிடம் மனம் நிறைந்த ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.


தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, நல்நூலகர் சவடமுத்து மற்றும் நூலகத்தில் பயிலும் பிற போட்டித் தேர்வு மாணவர்களுக்கு சிவானந்தம் இனிப்பு வழங்கி சிறப்பித்தார். சிவானந்தத்தின் இந்த வெற்றி, தென்கரை நூலகத்தில் தனித்து பயிலும் பிற போட்டித் தேர்வு மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.

நல்நூலகர் சவடமுத்து, அரசுப் பணியில் தேர்ச்சி பெற்ற சிவானந்தத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, எதிர்கால பணி வாழ்வு குறித்து சில அறிவுரைகளையும் வழங்கினார். தொடர்ந்து, சிவானந்தம் அங்கு பயிலும் பிற போட்டித் தேர்வு மாணவர்களுடன் தனது அனுபவங்களையும், தான் கற்றறிந்த பயனுள்ள தேர்வு முறைகளையும் பகிர்ந்து கொண்டார். அவரது அனுபவப் பகிர்வு மற்ற மாணவர்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது.


தென்கரை நூலகம் தொடர்ந்து பல மாணவர்களுக்கு அரசுப் பணியை எட்டும் கனவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. சிவானந்தத்தின் வெற்றி, நூலகத்தின் முக்கியத்துவத்தையும், விடாமுயற்சியின் பயனையும் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நூலகத்தில் பயின்று ஆண்டுக்கு பத்து மாணவர்கள் அரசு பணிக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment