| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

அருவியில் சோகம்...! குளிக்கச் சென்ற 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்...!

by Vignesh Perumal on | 2025-05-06 08:08 PM

Share:


அருவியில் சோகம்...! குளிக்கச் சென்ற 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்...!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருஷநாடு அருகே உள்ள சின்னசுருளி அருவிக்கு சுற்றுலா வந்த 10 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவரின் மகன் ராகேஷ் (10), தனது தாய் மற்றும் உறவினர்களுடன் நேற்று (05.05.2025) சின்னசுருளி அருவிக்கு குளிக்க வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ராகேஷ் திடீரென காணாமல் போனான்.

சிறுவன் காணாமல் போனதை அறிந்த அவரது உறவினர்கள், அருவி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக தேடினர். அப்போது, அருவியிலிருந்து தண்ணீர் விழும் குளம் போன்ற பகுதியில் ராகேஷ் உடல் ஒதுங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சிறுவனின் உடலை மீட்ட உறவினர்கள், அருகிலுள்ள குமணன் துளு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர்கள் சிறுவனின் உடலை பரிசோதனை செய்தபோது, ராகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து மயிலாடும் பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சின்னசுருளி அருவியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணியாளர்கள் இல்லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சின்னசுருளி அருவியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நிருபர்-மீனாட்சி சுந்தரம் ஆண்டிபட்டி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment