| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

சிலை தடுப்புப் பிரிவு அதிரடி..! கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்...!

by Vignesh Perumal on | 2025-05-06 02:43 PM

Share:


சிலை தடுப்புப் பிரிவு அதிரடி..! கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்...!

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையின் துரித நடவடிக்கையால், நெதர்லாந்து நாட்டில் பழமையான கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடப்படுவது கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த விலைமதிப்பற்ற உலோகச் சிலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இந்த சிலை, தற்போது நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடப்பட இருப்பதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், நெதர்லாந்து நாட்டு காவல்துறைக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் அவசர மின்னஞ்சல் மூலம் தகவலைத் தெரிவித்தனர். சிலையின் பழமை மற்றும் அது திருடப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பினர்.

தமிழ்நாடு காவல்துறையின் துரித நடவடிக்கையின் பலனாக, நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள் ஏலத்தை உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டனர். தற்போது அந்த கண்ணப்ப நாயனார் சிலை நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

சிலையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு நாட்டு அரசுகளும் இணைந்து இந்த பணியை விரைவில் முடித்து, பழமையான சிலையை அதன் தாயகமான திருப்புகழூர் கோயிலுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் இந்த துரித நடவடிக்கை பாராட்டுக்களை குவித்து வருகிறது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment