| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

மதமாற்ற முயற்சி...! இந்து எழுச்சி முன்னணி கடும் கண்டனம்..!

by Vignesh Perumal on | 2025-05-05 06:39 PM

Share:


மதமாற்ற முயற்சி...! இந்து எழுச்சி முன்னணி கடும் கண்டனம்..!

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் புனிதமான நாட்களில் கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக்கள் மதமாற்ற முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக க. ராமராஜ், மாவட்ட தலைவர், தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் திருவிழா நாளை (06.05.2025) தொடங்கி வரும் 13.05.2025 வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழா நாட்களில் தேனி மாவட்டம் முழுவதும் இந்துக்கள் விரதம் இருந்து கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இத்தகைய புனிதமான காலங்களில், சில கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ நோட்டீஸ்கள் வழங்கி மதமாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 04.05.2025 அன்று, காவல்துறையின் அனுமதி பெற்றதா என்பது தெளிவில்லாமல், 300-க்கும் மேற்பட்டோர் ரேடியோ மற்றும் மைக்குகளைப் பயன்படுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு தேனியிலிருந்து பெரியகுளம் சாலையில் அன்னஞ்சி வரை ஜெபத்துடன் பிரச்சாரம் செய்தனர்.

குறிப்பாக, இன்று (05.05.2025), ஓடைப்பட்டி பகுதியில் விரதமிருந்து பக்தியில் ஈடுபட்டிருந்த இந்து வீடுகளில் நோட்டீஸ் வழங்கிய பாதிரியார்கள், ஓடைப்பட்டி காவல் நிலையத்தால் விசாரணைக்காக அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விரத காலங்களில் மதமாற்றச் செயல்கள் தீவிரமாக நடைபெறுவது சமூக அமைதிக்கும், மத நம்பிக்கைகளுக்கும் பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே, இத்தகைய செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க, இது போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

எனவே, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment