| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

மார்க்கெட் கடைகள் அகற்றம்..! நகராட்சி நோட்டீஸ் வழங்க முடிவு...!

by Vignesh Perumal on | 2025-05-01 07:52 PM

Share:


மார்க்கெட் கடைகள் அகற்றம்..! நகராட்சி நோட்டீஸ் வழங்க முடிவு...!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள சுமார் 800 கடைகளை அகற்றிவிட்டு புதிய கடைகள் கட்ட குன்னூர் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் பூமி பூஜை போடப்பட்டது. இந்த திட்டத்திற்கு குன்னூர் மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அடுத்த வாரம் முதல் கடைகளை காலி செய்யுமாறு முறையாக நோட்டீஸ் வழங்க குன்னூர் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்டப்படவுள்ள வணிக வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக 158 கார்கள் மற்றும் 158 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது. மேலும், தரை தளத்தில் 159 கடைகளும், முதல் தளத்தில் 134 கடைகளும், இரண்டாவது தளத்தில் 144 கடைகளும், மூன்றாவது தளத்தில் 241 கடைகளுமாக மொத்தம் 678 கடைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கட்டுமானப் பணியை நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஜிவி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இந்த திட்டத்திற்கு குன்னூர் மார்க்கெட் வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குன்னூர் நகராட்சி நிர்வாகம் அடுத்த வாரம் முதல் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகள், மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் உழவர் சந்தை பகுதிக்கு மாற்றப்பட உள்ளன. நகைக்கடை மற்றும் சில முக்கிய கடைகள் ஐடியுபி காம்ப்ளக்ஸ் பகுதிக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் மார்க்கெட் பகுதியில் முன்பு ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்த கடைகளை சீரமைத்து வியாபாரம் செய்து கொள்ள நகராட்சி நிர்வாகம் வாய்மொழி உத்தரவு மட்டுமே வழங்கியதாகவும், வியாபாரிகள் மிகப்பெரிய தொகை செலவு செய்து கடைகளை சீரமைத்து தற்போது நடத்தி வரும் நிலையில், புதிய கடைகள் கட்டும் போது மீண்டும் கடைகள் இடிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய குன்னூர் நகராட்சி ஆணையாளர், புதிய கடைகள் கட்டிய பிறகும் பழைய கடைகள் இடிக்கப்படும் என்றும், அப்போது வியாபாரிகள் அதிக தொகை செலவு செய்துவிட்டதாக கூறி கடையை இடிக்க வேண்டாம் என்று கதறி அழுதாலும் கடைகள் கண்டிப்பாக இடிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். நகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment