by Vignesh Perumal on | 2025-04-09 04:58 PM
கேரளாவில் வாகனங்களுக்கான ஃபேன்ஸி நம்பர் ஏலம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சமீபத்தில் நடந்த ஏலத்தில் KL 07 DG 0007 என்ற ஃபேன்ஸி நம்பரை ₹45.99 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது. இது கேரளாவில் ஒரு ஃபேன்ஸி நம்பருக்காக இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.
இந்த நம்பரை வாங்கிய நிறுவனம், இந்த நம்பரை தங்கள் புதிய Lamborghini Urus காருக்காக பெற்றுள்ளது. இந்த கார் சுமார் ₹4 கோடி மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலம் மோட்டார் வாகனத் துறையால் ஆன்லைனில் நடத்தப்பட்டது. ₹25,000 அடிப்படை விலையில் தொடங்கிய இந்த ஏலத்தில் ஐந்து பேர் கலந்து கொண்டனர். கடுமையான போட்டிக்குப் பிறகு ₹45.99 லட்சத்திற்கு இந்த நம்பர் ஏலம் போனது. இதற்கு முன்பு, கேரளாவில் அதிகபட்சமாக ஒரு ஃபேன்ஸி நம்பருக்காக ₹31 லட்சம் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
ஃபேன்ஸி நம்பர்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அரசுக்கும் இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. இந்த ஏலம் மூலம் கிடைத்த வருவாயை அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.