by Vignesh Perumal on | 2026-06-06 12:35 PM
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், பிறந்து 9 மாதமே ஆன பெண் குழந்தையைத் தண்ணீரில் மூழ்கடித்துப் படுகொலை செய்த தாயும், அதற்கு உடந்தையாக இருந்த தந்தையும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அடுத்த சாப்டூர் - மெய்யணூத்தப்பட்டி அருகே உள்ள ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை இவரது மனைவி கலைச்செல்வி. இந்தத் தம்பதியினருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையில், கலைச்செல்விக்கு அதே ஊரைச் சேர்ந்த வேறொரு நபருடன் தகாத உறவு (கள்ளக்காதல்) இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுப் பிரிந்தனர். பின்னர், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, உறவினர்கள் முன்னிலையில் சமரசம் செய்யப்பட்டு இருவரும் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
மீண்டும் சேர்ந்து வாழ்ந்த சில மாதங்களில் கலைச்செல்வி கர்ப்பமடைந்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், கலைச்செல்வியின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகமடைந்திருந்த பாண்டித்துரை, "இந்தக் குழந்தை எனக்குப் பிறந்ததுதானா?" என்ற சந்தேகத்திலேயே இருந்துள்ளார்.
இதன் காரணமாக அந்தக் குழந்தைக்குப் பெயர் கூட வைக்காமல், குழந்தையைச் சுட்டிக்காட்டி மனைவி கலைச்செல்வியுடன் பாண்டித்துரை தினமும் குடித்துவிட்டு வந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கணவன் தினமும் குழந்தையை வைத்துத் தகராறு செய்து வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கலைச்செல்வி, கடந்த மே மாதம் 8-ஆம் தேதி, யாரும் இல்லாத நேரத்தில் தனது 9 மாதப் பெண் குழந்தையைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொடூரமாகப் படுகொலை செய்தார்.
கொலையை மறைப்பதற்காக, குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக நாடகமாடியுள்ளனர். உடற்கூறாய்வு ஏதும் செய்யாமல், அவசர அவசரமாகக் குழந்தையின் உடலை அன்றைய தினமே மயானத்தில் அடக்கமும் செய்துவிட்டனர்.
குழந்தையின் திடீர் மரணத்திலும், அவசர அவசரமாக உடல் புதைக்கப்பட்டதைக் கவனித்த அக்கம் பக்கத்தினருக்கும், கிராம மக்களுக்கும் பலத்த சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர்கள் காவல் துறைக்கு ரகசியத் தகவல் அளித்தனர்.
இதன் பேரில், கடந்த மே மாதம் 11-ஆம் தேதி, சேடபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், சாப்டூர் போலீசார் மயானத்திற்குச் சென்று குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்தனர். அங்குள்ள மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்தனர்.
உடற்கூறாய்வு அறிக்கையில், குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு, மூச்சுத்திணறிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
இதனைத் தொடர்ந்து சாப்டூர் காவல் நிலைய போலீசார் கலைச்செல்வி மற்றும் பாண்டித்துரை ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கணவனின் சந்தேகப் பேச்சால் குழந்தையைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றதை தாய் கலைச்செல்வி ஒப்புக்கொண்டார். மேலும், கொலை விபரத்தைத் தெரிந்தும் அதனை மறைத்து, உடலை அவசரமாகப் புதைக்க உதவியதாக பாண்டித்துரையும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, சாப்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாய் கலைச்செல்வி மற்றும் தந்தை பாண்டித்துரை ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் மற்றும் சந்தேகப் பேய்க்கு 9 மாதப் பிஞ்சு குழந்தை பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !