by admin on | 2025-10-02 07:40 PM
தேனி-அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையத்தில் செயல்பட்டு வரும் காதி கிராப்ட் அங்காடியில் இன்று (02.10.2025) அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் (காதிகிராப்ட்) சார்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இந்திய திருநாட்டின் இதயமாக விளங்கும் கிராமப்புற ஏழை எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற்குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது.கடந்த 2024-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ரூ.38 இலட்சத்திற்கு கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு (2025) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்திற்கு ரூ.100 இலட்சம் மதிப்புள்ள கதர் இரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பருத்தி கதர், பாலிஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு அனைத்து அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கதர் அங்காடிகள் (Khadi Craft) மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துவக்கப்பட்டுள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கதர் ரகங்களை வாங்கி, கிராமப்புற ஏழை எளிய நூற்போர்கள் மற்றும் நெய்வோர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஐ.மகாலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.நல்லதம்பி, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்நல அலுவலர் மரு.கவிப்பிரியா, செயற்பொறியாளர் திரு.குணசேகரன், கதர் ஆய்வாளர் திரு.திருச்செல்வம், மேலாளர் திரு.ஜோதிராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், கதர் வாரிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
T. Muthukamachi evidence editor 9842337244.