by Vignesh Perumal on | 2025-09-30 07:40 PM
திண்டுக்கல் மாவட்டம், 2012-ஆம் ஆண்டு விபத்து வழக்கில் நீதிமன்றப் பிணை பெற்று வெளியே சென்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த, பிடியானை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை, திண்டுக்கல் தாலுகா போலீசார் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர்.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஒரு விபத்து தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், இரண்டல்லாபாறையைச் சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.
வழக்கின்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஆறுமுகம், பின்னர் நீதிமன்றப் பிணை பெற்று வெளியே சென்றார். அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால், திண்டுக்கல் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியானை (வாரண்ட்) பிறப்பித்தது.
பிடியானையை நிறைவேற்றும் விதமாக, புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சங்கர் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் காவலர்கள் கொண்ட குழு, ஆறுமுகத்தைத் தீவிரமாகத் தேடி வந்தது.
தொடர் தேடுதலுக்குப் பிறகு, ஆறுமுகத்தைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
ஆசிரியர்கள் குழு.....