by Vignesh Perumal on | 2025-09-30 06:49 PM
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (45) என்பவர், கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, தவறான மற்றும் அவதூறான தகவல்களைச் சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது. அவரது இந்தச் செயல், அப்பகுதியில் பொது அமைதியைக் குலைக்கும் நோக்கம் கொண்டதாகக் காவல்துறை கருதியது.
கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியன், குளித்தலை அருகே உள்ள மாயனூர் சுங்கச்சாவடியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
பொதுமக்களிடையே அச்சத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் அலெக்ஸ் பாண்டியனைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் குறித்து வதந்திகளைப் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆசிரியர்கள் குழு.....