by Vignesh Perumal on | 2025-08-07 03:10 PM
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகளின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, இந்தியப் பொருட்களுக்கு முதலில் 25% வரி விதித்தார். தற்போது, கூடுதலாக 25% வரி விதித்ததால், மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
இந்த வரி உயர்வுக்கு மற்றொரு முக்கிய காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, தனது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், இந்திய அரசு இதற்கு உடன்பட மறுத்துள்ளது. இந்தச் சூழலில், டிரம்பின் வரிவிதிப்பு, இந்த விவகாரத்துடன் தொடர்புடையது என்ற யூகங்கள் வலுத்துள்ளன.
டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "இந்திய விவசாயிகளின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளிப்போம். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. விவசாயிகள் நலனைப் பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தாலும், அதற்குத் தயாராக இருக்கிறேன். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது" என்று கூறினார்.
பிரதமரின் இந்த கருத்து, அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிவதில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்