by Vignesh Perumal on | 2025-08-07 12:18 PM
கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்டவிரோத விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரளாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களில் சிலர், முறையாக விடுமுறை எடுக்காமல், நீண்ட நாட்களாகப் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், மருத்துவ சேவைகள் தடைபடுவதாகவும் புகார்கள் வந்தன.
இது குறித்து, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டவிரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்களுக்கு, உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. மருத்துவப் பணிகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, இந்த மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "சுகாதாரத் துறையின் முக்கிய நோக்கம், மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை வழங்குவதுதான். அதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது அரசு தயங்காமல் நடவடிக்கை எடுக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.
கேரள அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசுப் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்