by Vignesh Perumal on | 2025-08-05 10:04 AM
கோயம்புத்தூர் கிணத்துக்கடவு அருகே செயல்பட்டு வந்த மகாராஜா மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற தனியார் கல்லூரி போலியானது என்று தெரியவந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்துள்ளனர். உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் (ID Card), 'சன்ரைஸ் யூனிவர்சிட்டி ஆஃப் ராஜஸ்தான்' என்று அச்சிடப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதல் ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இரண்டாம் பருவத் தேர்வு (semester) நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படாத நிலையிலும், மாணவர்கள் மூன்றாவது ஆண்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த குளறுபடிகள் மாணவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளைத் தொடர்பு கொண்டுள்ளனர்.
சன்ரைஸ் யூனிவர்சிட்டி ஆஃப் ராஜஸ்தான் பல்கலைக்கழகம், "தென்னிந்தியாவில் எங்கள் பல்கலைக்கழகத்தின் எந்த ஒரு கிளையும் செயல்படவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) - "கோயம்புத்தூர் கிணத்துக்கடவில் உள்ள மகாராஜா மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்திற்கு எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
இந்த அதிர்ச்சி தகவல்கள் கிடைத்ததையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த மாணவர்கள், தற்போது தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதால் பெரும் வேதனையில் உள்ளனர்.
இவ்வளவு பெரிய போலி கல்லூரி, எந்தவிதமான அங்கீகாரமும் இன்றி இயங்கி வந்திருப்பது, தமிழக உயர்கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தெரியுமா? ஒரு போலி நிறுவனம் எப்படி இவ்வளவு காலம் செயல்பட முடிந்தது? இதுபோன்ற 'தொழில்நுட்பத் திருடன்கள்' மீது அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் குழு.....