by Vignesh Perumal on | 2025-08-04 02:46 PM
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி பொற்கொடி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசும், காவல்துறையும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி, ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது மனைவி பொற்கொடியும் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தலையிடுவதால், காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.
கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரம் விசாரிக்கப்படவில்லை. எனவே, அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, உண்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரவுடிகள் என்பதால், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், "ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்கக் கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு குறித்து தமிழக அரசும், காவல்துறையும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். இந்த உத்தரவு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்