by Vignesh Perumal on | 2025-08-04 11:10 AM
ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில், பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என கோயில் இணை ஆணையர் செல்லதுரை உத்தரவிட்டதைக் கண்டித்து, ராம் சேது யாத்திரைப் பணியாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில், ராம் சேது யாத்திரை என்ற பெயரில் பணியாளர்கள், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ராமாயணக் கதைகளைக் கூறி அதற்கு ₹20 கட்டணம் வசூலித்து வந்துள்ளனர். இதனால், பக்தர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்கள் வந்ததையடுத்து, கோயில் இணை ஆணையர் செல்லதுரை, யாத்திரை பணியாளர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்றும், கோயிலில் எவ்வித பணியிலும் ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இணை ஆணையரின் இந்த உத்தரவைக் கண்டித்து, யாத்திரை பணியாளர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் இன்று தனுஷ்கோடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், யாத்திரை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்