by Vignesh Perumal on | 2025-08-04 11:00 AM
அடிப்படை வசதிகள் இல்லாததாலும், தொடர் கொலைச் சம்பவங்களாலும் அச்சமடைந்த சிவகங்கை மாவட்டம், நாட்டாரசன்கோட்டை அருகே உள்ள நாட்டாகுடி கிராம மக்கள், ஒரே இரவில் தங்கள் ஊரைக் காலி செய்துவிட்டுச் சென்றனர். சுமார் 50 குடும்பங்கள் வசித்த கிராமம், தற்போது ஒரே ஒரு முதியவர் மட்டும் வசிக்கும் கிராமமாக மாறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், நாட்டாரசன்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வந்த அவர்களுக்கு, அண்மையில் நடந்த இரண்டு கொலைச் சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.
கடந்த ஒரு மாதத்தில், இரண்டு இளைஞர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களால் கிராமத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியதாகவும், தொடர் அச்சத்தால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்றும் மக்கள் கூறினர்.
சமீபத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் மற்றும் அரசின் அலட்சியம் ஆகிய காரணங்களால் மனமுடைந்த கிராம மக்கள், இரவோடு இரவாக தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறினர். சுமார் 50 குடும்பங்கள் வசித்த அந்த கிராமத்தில், தற்போது ஒரு முதியவர் மட்டும் வசித்து வருகிறார். அவர் செல்ல மறுத்ததால், தனியாக வசிப்பதாகத் தெரிவித்தார்.
அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாததால், ஒரு கிராமமே ஒரே இரவில் காலி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு....