by Vignesh Perumal on | 2025-08-04 10:27 AM
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அது தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு என்றும், இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே தங்கள் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அறிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், "முதலமைச்சர் அவர்களின் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல். பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
"முதலமைச்சருடனான சந்திப்பு தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு. இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை. நான் எங்கிருந்தாலும் மக்களின் உரிமை, நலன் என்று வரும்போது ஜெயலலிதா வழியில் செயல்படக்கூடியவன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளை உறுதியாக எடுப்போம்" என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்