by Vignesh Perumal on | 2025-08-03 01:35 PM
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட செந்துறையை அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சந்தனக்கட்டைகளைக் கடத்தி வந்த இருவரை நத்தம் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 20 கிலோ சந்தனக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
நத்தம் காவல் நிலைய போலீசார், செந்துறை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், போலீசாரைக் கண்டதும் தங்களது வாகனத்தையும், அதில் இருந்த சந்தனக்கட்டைகளையும் போட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.
போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 20 கிலோ எடை கொண்ட 8 சந்தனக்கட்டைகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக்கட்டைகளையும், இருசக்கர வாகனத்தையும் அய்யலூர் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல் .